52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
இந்திய பத்திரச் சந்தையில் பணத்தைக் கொட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

இந்தியாவின் கடன் பத்திரச் சந்தைக்கு (bond market) வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் திரும்பியுள்ளது நிதிச் சந்தைகளில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஜூன் மாதத்தில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) இந்திய அரசு கடன் பத்திரங்களை பெருமளவில் வாங்கியுள்ளனர். சில வர்த்தக நாட்களிலேயே சுமார் ரூ. 17,000 கோடி முதலீடு செய்தனர். மத்திய அரசு வழங்கிய குறிப்பிடத்தக்க வரிச் சலுகைகள் மற்றும் மேம்பட்டு வரும் உலகளாவிய சூழல் ஆகியவற்றால் இந்தியா மீண்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விருப்பத்திற்குரிய இடமாக மாறியுள்ளது தெரிகிறது.நடப்பு ஜூன் மாதத்தில் இதுவரையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய கடன் பத்திரச் சந்தையில் 1.84 பில்லியன் டாலர் (ரூ. 17,000 கோடி) முதலீடு செய்துள்ளனர். கடந்த 16 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மாதாந்திர முதலீடு இதுவாகக் கருதப்படுகிறது. இதற்கு முன், 2025ஆம் ஆண்டின் மார்ச் மாதம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 3.69 பில்லியன் டாலர் முதலீடு செய்திருந்தனர். 2025-26 நிதியாண்டு முழுவதிலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 2.07 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன் பத்திரங்களை மட்டுமே வாங்கியிருந்தனர். அதேசமயம் நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த எண்ணிக்கை வெறும் 130 மில்லியன் டாலராக மட்டுமே இருந்தது.

மத்திய அரசின் முடிவால் மாறிய சூழல்!

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் வருவதற்கான முக்கிய காரணமாக மத்திய அரசின் சமீபத்திய முடிவு கருதப்படுகிறது. ஜூன் 6ஆம் தேதியன்று மத்திய அரசு கடன் பத்திரங்கள் மீதான வெளிநாட்டு முதலீடுகளுக்கான நீண்ட கால மற்றும் குறுகிய கால மூலதன ஆதாய வரிகளை (capital gains taxes) ரத்து செய்தது. இதனுடன், வட்டி வருமானம் மீதான 'வித்ஹோல்டிங்' வரியும் (withholding tax) நீக்கப்பட்டது. முன்னதாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கு 12.5 சதவீதமும், குறுகிய கால ஆதாயங்களுக்கு 30 சதவீதமும், வட்டி வருமானத்திற்கு 20 சதவீதமும் வரி செலுத்த வேண்டியிருந்தது. இந்த வரிகள் நீக்கப்பட்டதால் இந்திய கடன் பத்திரங்களின் ஈர்ப்புத்தன்மை கணிசமாக அதிகரித்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ரூபாய் மற்றும் கடன் பத்திர வருவாய்!

அதிகரித்த வெளிநாட்டு முதலீட்டின் தாக்கம் இந்திய நாணயம் மற்றும் கடன் பத்திரச் சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது. ஜூன் மாதத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 1 சதவீதம் வலுவடைந்தது. அதேவேளையில், 10 ஆண்டு கால அரசு கடன் பத்திரத்தின் வருவாய் 7 சதவீதத்திலிருந்து 6.87 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது அரசின் கடன் வாங்கும் செலவைக் குறைப்பதோடு, நிதி ஸ்திரத்தன்மையையும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு முதலீடுகள் மேலும் வரும்!

வரிச் சலுகைகள் மற்றும் பிற சீர்திருத்தங்கள் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்திய கடன் பத்திரச் சந்தைக்கு 45 பில்லியன் முதல் 50 பில்லியன் டாலர் வரையிலான வெளிநாட்டு முதலீடுகள் ஈர்க்கப்படலாம் என்று சந்தை நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். மேலும், FAR-இன் கீழ் கூடுதல் அரசுப் பத்திரங்களைச் சேர்ப்பதன் மூலம் முதலீட்டாளர்களுக்கான வழிமுறைகளை எளிதாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *