
நள்ளிரவில் நிகழ்ந்த கொடூரம்: விபத்தின் பின்னணி
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மஞ்சங்கரணை - கன்னிகைப்பேர் பகுதியில் தனியார் இறால் மற்றும் கடல் உணவு பதப்படுத்தும் ஆலை இயங்கி வருகிறது.இங்கு அசாம், ஒடிசா, ஜார்கண்ட் போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வந்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை (ஜூன் 21) தொழிலாளர்கள் ஆழமான உறக்கத்தில் இருந்தபோது, ஆலையின் குளிரூட்டும் பிரிவில் (Cold Storage) பயன்படுத்தப்படும் அம்மோனியா நச்சு வாயு திடீரென கசியத் தொடங்கியுள்ளது.நெடிமிக்க இந்த வாயு தொழிலாளர்கள் தங்கியிருந்த அறைக்குள் வேகமாக பரவியதால், உறக்கத்தில் இருந்த பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அலறியடித்து ஓடினர். எனினும், அடர்த்தியான நச்சு வாயுவை சுவாசித்ததால் அடுத்தடுத்து தொழிலாளர்கள் மயங்கி விழுந்துள்ளனர்.
நுரையீரல் வீக்கம், மூக்கு, வாயில் ரத்தக்கசிவு: 7 பேர் உயிரிழப்பு
வாயு கசிவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு கடுமையான வாந்தி, கண்கள் எரிச்சல் மற்றும் மூச்சுவிடுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. நச்சு வாயு நேரடியாக உடலுக்குள் சென்றதால், பாதிக்கப்பட்ட சிலருக்கு வாய் மற்றும் மூக்கிலிருந்து ரத்தம் வழியத் தொடங்கியது.அவசர அவசரமாக மீட்கப்பட்ட தொழிலாளர்கள் மஞ்சங்கரணை வேல்ஸ் மருத்துவமனை மற்றும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், தீவிர சிகிச்சை பலனின்றி 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். நச்சு வாயு நுரையீரலை முற்றிலுமாக தாக்கியதே இவர்களின் உயிரிழப்புக்கு காரணம் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 74-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த NDRF பேரிடர் மீட்புப் படை
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் சென்னையில் உள்ள பிரிவு சம்பவ இடத்திற்கு விரைந்தது.30-க்கும் மேற்பட்ட பேரிடர் மீட்புப் படை வீரர்கள் அதிநவீன வாயு கண்டறியும் கருவிகள் மற்றும் பாதுகாப்பு உடைகளுடன் (PPE) ஆலைக்குள் புகுந்தனர். ஆலைக்குள் மயங்கிக் கிடந்தவர்களை பத்திரமாக மீட்டதோடு, வாயு கசிவு ஏற்பட்ட பகுதியை கண்டறிந்து மேலும் நச்சு வாயு பரவாமல் இருக்க தற்காலிகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தமிழக அரசு அதிரடி: உயர்மட்ட விசாரணைக் குழு அமைப்பு
இந்த கோர விபத்து குறித்து முழுமையாக விசாரிக்க தமிழ்நாடு அரசு உடனடியாக உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள ஆணையின்படி
- சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் டாக்டர். சாந்தாராம் தலைமையில் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
- இந்த குழு விபத்து நடந்த தொழிற்சாலையில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏதேனும் இருந்ததா, விபத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
அரசின் விதிமுறைகளை மீறி தொழிற்சாலை இயக்கப்பட்டதா என்பது குறித்தும், தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதா என்பது குறித்தும் காவல்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தனித்தனியாக விசாரணையைத் தொடங்கியுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக ஆலை நிர்வாகத்தின் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
