குஜராத்தில் உயர் ரத்த அழுத்தப் பிரச்னைக்கான போலி மருந்துகளைத் தயாரித்து, மாநிலங்கள் இடையே விநியோகம் செய்து வந்த கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை அகமதாபாத் குற்றப்பிரிவு போலீஸாரும், உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகமும் (FDCA) இணைந்து கைது செய்துள்ளனர். இந்த அதிர்ச்சிச் சம்பவம் நாடு முழுவதும் மருந்துத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயர் ரத்த அழுத்த நோயாளிகள் தினமும் உட்கொள்ளும் மாத்திரைகள் போலியாக இருக்கும் பட்சத்தில், அது நோயாளிகளின் உயிரைக்கே ஆபத்தாக முடியும். ரத்த அழுத்தம் கட்டுப்பாடில்லாமல் போய் பக்கவாதம், மாரடைப்பு மற்றும் சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்ட தீவிரப் பிரச்னைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் போலி மருந்துகள் குறித்து தீவிர விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
போலி மருந்துகளைக் கண்டறிய, மருந்து அட்டையில் உள்ள எழுத்துப்பிழைகள், கியூஆர் கோடு (QR Code), ஹோலோகிராம் முத்திரை மற்றும் தயாரிப்பு விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட மருந்தகங்களில் மட்டுமே உரிய ரசீதுடன் மருந்துகளை வாங்க வேண்டும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.