பிரபல தொழிலதிபர் சுபாஷ் சந்திரா தொடர்பான கடன் வழக்கில், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) பிறப்பித்துள்ள உத்தரவு நிதித் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சுபாஷ் சந்திராவுக்கு சொந்தமான நிறுவனங்கள் பெற்ற 22,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனில், சுமார் 99.97 சதவீதத் தொகையை தள்ளுபடி செய்து NCLT தீர்ப்பளித்துள்ளது.
இந்த உத்தரவின்படி, மொத்தக் கடனுக்குப் பதிலாக வெறும் 6.5 கோடி ரூபாயை மட்டும் செலுத்தினால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பலாயிரம் கோடி ரூபாய் கடனில் இத்தனை பெரிய தொகையை தள்ளுபடி (Haircut) செய்தது, பொதுத்துறை வங்கிகளுக்கு மீள முடியாத பெரும் இழப்பை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சாதாரண பொதுமக்கள் மற்றும் சிறு வணிகர்கள் வாங்கும் கடன்களுக்கு கடுமையான வசூல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் நிலையில், இதுபோன்ற பெரும் தொழிலதிபர்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படுவது எந்த வகையில் நியாயம் என்ற விவாதம் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. மேலும், நாட்டின் கடன் தீர்வு மற்றும் Insolvency (NCLT) நடைமுறைகளின் வெளிப்படைத்தன்மை குறித்தும் தற்சமயம் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.