ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமாக, 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஊருக்குத் திரும்பிய நபர் ஒருவர் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கண்முன்னே கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்டிருந்த நபர், சட்ட நடவடிக்கைகளுக்கு அஞ்சி தலைமறைவாகி வேறு பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் தனது சித்தப்பா காலமான செய்தி அறிந்து, இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக குண்டூர் நகரில் உள்ள நகரம்பாளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள தனது சொந்த ஊருக்குக் குடும்பத்துடன் வந்துள்ளார்.
அவர் ஊருக்குத் திரும்பிய தகவலை அறிந்த எதிர்த்தரப்பினர், பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, மனைவி மற்றும் குழந்தைகள் உடன் இருந்தபோதே, மர்ம நபர்கள் திடீரென அவரைச் சூழ்ந்து கொடூரமாகத் தாக்கி கொலை செய்துவிட்டுத் தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து நகரம்பாளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.