வீடு, தோட்டம் மற்றும் விவசாய நிலங்களில் பாம்புகள் நுழைவதைத் தடுக்க இணையத்தில் பல்வேறு வகையான ரசாயன ஸ்பிரேக்களும், சில குறிப்பிட்ட தாவரங்களும் தீவிரமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நாகதாளி, சிறியாநங்கை போன்ற செடிகள் மற்றும் கந்தகம், நெப்தலீன் அடிப்படையிலான ஸ்பிரேக்கள் பாம்புகளை விரட்டும் என்று பரவலாக நம்பப்படுகிறது. ஆனால், இவை உண்மையில் பலனளிக்கின்றனவா என்பது குறித்து அறிவியல் ஆய்வாளர்கள் முற்றிலும் மாறுபட்ட தகவலைத் தெரிவிக்கின்றனர்.
அறிவியல் ரீதியாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளின்படி, எந்தவொரு ரசாயன ஸ்பிரேக்களோ அல்லது தாவரங்களோ பாம்புகளை முழுமையாக விரட்டுவதில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பாம்புகளுக்கு நுகர்வுத் திறன் அதிகம் என்றாலும், உணவைத் தேடியோ அல்லது பாதுகாப்பான தங்குமிடத்திற்கோ வரும் பாம்புகளை இந்த மணங்கள் தடுப்பதில்லை. இணையத்தில் பரப்பப்படும் பல விளம்பரங்கள் வெறும் வியாபார நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்படுகின்றன.
பாம்புகள் வருவதைத் தடுக்கச் சிறந்த வழி, வீட்டின் சுற்றப்புறத்தைப் புதர்கள் இன்றித் தூய்மையாக வைத்துக்கொள்வதும், பாம்புகளின் முக்கிய உணவான எலிகள் பெருகுவதைக் கட்டுப்படுத்துவதும் மட்டுமே ஆகும். எனவே, போலியான ரசாயனப் பொருட்களை வாங்கிப் பணத்தை விரயம் செய்யாமல், விழிப்புணர்வுடன் செயல்படுவதே பாதுகாப்பானது என வன உயிரின ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.