வீடு, தோட்டம் மற்றும் விவசாய நிலங்களில் பாம்புகளின் நடமாட்டத்தைத் தடுக்க இணையத்திலும் சந்தையிலும் பல்வேறு வகையான ஸ்பிரேக்கள், ரசாயனப் பொடிகள் மற்றும் சில குறிப்பிட்ட தாவரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவை பாம்புகளை உடனடியாக விரட்டிவிடும் என்ற விளம்பரங்களை நம்பி பலரும் இவற்றை அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர்.
ஆனால், அறிவியல் பூர்வமாக இவை உண்மையிலேயே பயனுள்ளவையா என்ற கேள்வி எழுகிறது. வனவிலங்கு வல்லுநர்கள் மற்றும் அறிவியல் ஆய்வுகளின்படி, சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான ரசாயன விரட்டிகள் பாம்புகளின் மீது எந்தவொரு நிலையான தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. பாம்புகள் தங்களின் நாக்கின் மூலம் வாசனை உணர்வைப் பெறுகின்றன. இருப்பினும், வெளிக்காற்றில் தெளிக்கப்படும் ஸ்பிரேக்கள் மழை மற்றும் காற்றினால் விரைவில் தங்கள் வீரியத்தை இழந்துவிடுகின்றன.
அதேபோல, சில குறிப்பிட்ட செடிகள் பாம்புகளை விரட்டும் என்பதும் வெறும் நம்பிக்கையே தவிர, அதற்கு முறையான அறிவியல் சான்றுகள் இல்லை. வீடுகளில் பாம்புகள் வராமல் தடுக்க ஒரே வழி, சுற்றப்புறத்தைப் புதர்கள் மற்றும் கழிவுகள் இன்றி எலிகள் இல்லாதவாறு தூய்மையாகப் பராமரிப்பதே ஆகும்.