இந்தியாவில் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை இயக்கி வரும் மெட்டா நிறுவனம், குழந்தைப் பாலியல் துன்புறுத்தலை ஊக்குவிக்கும் வகையிலான விளம்பரங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி பிரச்சார அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த 10 மாதங்களில் மட்டும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் அடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட கட்டண விளம்பரங்களை மெட்டா நிறுவனம் தனது தளங்களில் வெளியிட்டுள்ளது. இத்தகைய விளம்பரங்கள் மூலம் மெட்டா நிறுவனம் பெரும் லாபம் அடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பயனர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மெட்டா நிர்வாகம் தொடர்ந்து கூறி வரும் நிலையில், இத்தகைய ஆபத்தான மற்றும் சட்டவிரோதமான விளம்பரங்களை அனுமதித்திருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து இந்திய அரசும், இணைய பாதுகாப்பு அமைப்புகளும் உடனடியாக மெட்டா நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.