தமிழ்நாட்டில் புதிய தனியார் பல்கலைக்கழகங்களைத் தொடங்குவதற்கான நடைமுறைகளில் இரண்டு முக்கியத் தளர்வுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநிலத்தின் உயர்கல்வித் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் இந்த நடவடிக்கை, தற்போது பெரும் விவாதத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அரசின் இந்த விதிகளின் திருத்தம், உயர்கல்வித் துறையை முழுமையாகத் தனியார்மயமாக்குவதற்கே வழிவகுக்கும் என எதிர்க்கட்சிகள், மாணவர் மற்றும் ஆசிரியர் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இத்தகைய தளர்வுகளால் கட்டணக் கொள்ளை அதிகரித்து, ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்விக் கனவு சிதையும் என்றும், தமிழகத்தின் அடையாளமான சமூகநீதி மற்றும் இடஒதுக்கீடு கொள்கைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அதேவேளையில், இந்தச் சட்டத் திருத்தம் தமிழ்நாட்டின் உயர்கல்வித் தரம் மற்றும் சர்வதேசக் கட்டமைப்பை மேம்படுத்துமா? அல்லது கல்வியை முழுக்க முழுக்க வணிகமயமாக்கிச் சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாக மாற்றுமா? என்ற காரசாரமான கேள்விகள் கல்வி ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளன.