உலகின் மிகக் கடுமையான சட்டத் திட்டங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகச் சௌதி அரேபியா திகழ்கிறது. சர்வதேச அளவில் அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனைகளை நிறைவேற்றும் முதல் மூன்று நாடுகளில் சௌதி அரேபியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, அங்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு, அவர்களின் உடல்கள் வழக்கமாக அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்து வருகிறது. அந்நாட்டின் சட்ட நடைமுறைகள், சுகாதாரக் கட்டுப்பாடுகள் மற்றும் குற்றங்களின் தீவிரத்தன்மை ஆகியவற்றைக் காரணம் காட்டி, உடல்கள் அந்நாட்டிலேயே அடக்கம் செய்யப்படுகின்றன. இதனால், தங்கள் உறவினர்களின் இறுதிச் சடங்கைக் கூட செய்ய முடியாமல், மரண தண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டினரின் குடும்பத்தினர் பெரும் சோகத்திலும் தவிப்பிலும் ஆழ்ந்துள்ளனர். இந்த விவகாரம் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.