ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 100 சதவீதம் வரை கடுமையான வரி விதிக்க வகை செய்யும் புதிய தடைகள் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கு இந்த மசோதா கூடுதல் அதிகாரங்களை வழங்குகிறது.
உக்ரைன் மீதான போரைக் காரணம் காட்டி ரஷ்யா மீது ஏற்கனவே பல பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்யாவிற்கு நிதியுதவி கிடைக்கும் வழிகளை அடைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். ரஷ்யாவிடம் இருந்து பெருமளவில் எண்ணெய் வாங்கும் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் முக்கிய இடம் வகிப்பதால், இந்த நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்திற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
இந்த மசோதா முழுமையாக நடைமுறைக்கு வந்தால், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்கள் மீது 100% வரை கூடுதல் வரிகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் சர்வதேச வர்த்தக சந்தையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய அரசு நிலமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.