தமிழ் திரையுலகில் தனது வெண்கலக் குரலாலும், நாட்டுப்புறப் பாணிப் பாடல்களாலும் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளைகொண்ட பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் (75) இன்று (அக்டோபர் 22) காலை காலமானார். அவரது மறைவு செய்தி தமிழ் திரையுலகினரையும், இசை ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘அருணாச்சலம்’, அஜித் நடித்த ‘காதல் கோட்டை’, மற்றும் ‘பருத்திவீரன்’ உள்ளிட்ட பல்வேறு முன்னணி திரைப்படங்களில் 300-க்கும் மேற்பட்ட பாடல்களை கிருஷ்ணராஜ் பாடியுள்ளார். குறிப்பாக, ‘பொற்காலம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ மற்றும் ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’ போன்ற காலத்தால் அழியாத ஹிட் பாடல்கள் இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தன.
தனது தனித்துவமான குரல் வளத்தால் 90-களின் தொடக்கம் முதல் பல வெற்றிப் பாடல்களைத் தந்த பாடகர் கிருஷ்ணராஜின் மறைவுக்குத் திரை பிரபலங்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.