அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய மற்றும் சீனப் படைகள் இடையே மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தை ‘தெற்கு திபெத்’ என்று அழைக்கும் சீனா, அப்பகுதிக்குத் தொடர்ந்து உரிமை கோரி வருகிறது. எனினும், சீனாவின் இந்த அபத்தமான கோரிக்கையை இந்திய அரசு தொடர்ந்து திட்டவட்டமாக நிராகரித்து வருகிறது.
எல்லை விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த மோதல் போக்கு, தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்திய எல்லைப்பகுதியைச் சீனா ஆக்கிரமிக்க முயல்வதாகக் கூறி, மத்திய அரசுக்கு எதிராகக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
நாட்டின் எல்லைப் பாதுகாப்பில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்தத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகள், எல்லையின் தற்போதைய உண்மை நிலவரத்தை மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இருநாடுகளுக்கு இடையே பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், அருணாச்சலப் பிரதேச எல்லையில் நீடிக்கும் இந்த இழுபறி நிலை தேசிய அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.