சொத்துத் தகராறு காரணமாகத் தனது சொந்தத் தம்பியைக் கொலை செய்துவிட்டு, எதுவும் தெரியாதது போல நாடகமாடிய அண்ணன் காவல்துறையிடம் மாட்டிக்கொண்ட அதிர்ச்சி சம்பவம் பாகிஸ்தானில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாகிஸ்தானின் குஜராத் பகுதியைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்கு இடையே நீண்டநாட்களாக சொத்து பங்கீடு தொடர்பான தகராறு இருந்து வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அண்ணன், தம்பியைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், தன் மீது சந்தேகம் வராமல் இருக்க, தான் சௌதி அரேபியாவில் இருந்ததாகவும், தம்பியின் மரணச் செய்தி கேட்டு அங்கிருந்து உடனடியாகத் தாய்நாடு திரும்பியதாகவும் கூறி நாடகமாடியுள்ளார்.
தம்பியின் இறுதிச் சடங்கிலும் துக்கம் தாளாமல் அழுவது போல நடித்து அனைவரையும் நம்ப வைத்துள்ளார். இருப்பினும், இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அப்பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில், கொலை நடந்த நேரத்தில் அண்ணன் சம்பவ இடத்திலேயே இருந்தது உறுதியானது. இதையடுத்து அவரைச் சுற்றி வளைத்துக் கைது செய்த காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.