சென்னையில் நடைபெற்ற ‘தமிழ்நாடு நாள்’ விழாவில் பங்கேற்றுப் பேசிய ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டிற்கென தனியாக மாநிலக் கொடி உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். இந்த கருத்து தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதப் புயலை ஏற்படுத்தியுள்ளது. மாநிலங்களின் உரிமை மற்றும் சுயாட்சியை வலியுறுத்தும் வகையில் தனிக்கொடி அவசியம் என ஒருதரப்பினர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தேசிய ஒருமைப்பாட்டிற்கு இது எதிரானது எனக் கூறி பாஜக உள்ளிட்ட கட்சியினர் இதற்கு கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
கடந்த காலங்களிலும் தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் முயற்சிகளும் பல்வேறு காலகட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் மாநிலங்கள் தனிக்கொடி வைத்துக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசியல் வல்லுநர்கள் ஆராய்ந்து வரும் வேளையில், ஆதவ் அர்ஜுனாவின் இந்த பேச்சு ‘மாநில சுயாட்சி’ மற்றும் ‘மாநில உரிமை’ குறித்த விவாதத்தை தமிழகத்தில் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.