
கடந்த திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல மக்கள் நலத்திட்டங்களில் முக்கியமானது 'நான் முதல்வன்'. 2022 அன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலினின் கனவுத் திட்டமாக துவங்கப்பட்ட இத்திட்டம் தமிழ்நாடு இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்தது. இதனிடையில் ஆட்சி மாறியதற்கு பின்பாக 'நான் முதல்வன்' திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தது. இந்நிலையில் இந்த திட்டம் குறித்து தற்போது தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளது கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் 'நான் முதல்வன்' திட்டத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில், அதன் பெயர் 'TN Skill Corporation' என மாற்றப்பட்டது. அதோடு முகப்புப்படம், பேனர் ஆகியவற்றிலும் இந்த புதிய பெயரே குறிப்பிடப்பட்டு இருந்தது. அதோடு கடந்த திமுக ஆட்சியில் இந்த திட்டம் சமபந்தமாக பதிவிடப்பட்டு இருந்த வீடியோக்கள் ஆகிய பழைய தரவுகளும் நீக்கப்பட்டது.புதிய அரசு ஆட்சி அமைத்த பிறகு மே 15 ஆம் தேதியில் இருந்தான பதிவுகள் மட்டும் இடம்பெற்றுள்ளன. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தது. மாணவர்கள் சாதனைகள் அடங்கிய ஆவணங்கள் எப்படி நீக்கலாம் என பலரும் சோஷியல் மீடியாவில் கேள்விகள் எழுப்பினார்கள். அதோடு மு.க. ஸ்டாலினின் பெயர் இல்லாத போது, நான் முதல்வன் எனும் பெயரினை எதற்காக மாற்ற வேண்டும். இந்த பெயரை சொன்னாலே பெயர் தான் நியாபகம் வரும் என்பதால் மாற்றி இருக்கிறீர்களா எனவும் திமுகவினர் கேள்வி எழுப்பினார்கள்.இந்நிலையில் இந்த திட்டம் குறித்து தற்போது திமுக தலைவர் தனது சமூக வளைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு சோஷியல் மீடியாவில் பலரின் கவனங்களை ஈர்த்து கொண்டிருக்கிறது. அதாவது, நான் முதல்வனில் பயனடைந்த ஒருவர் பேசும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், சமீபத்தில் துணை ஆட்சியராக பொறுப்பேற்ற ஜெனிபர் என்பவரிடம் நிரூபர், நீங்கள் பயிற்சி மையங்களுக்கு சென்றீர்களா? அரசு உங்களுக்கு எந்த வகையில் உதவியது என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு அவர் ஆரம்ப காலக்கட்டத்தில் நான் எந்த பயிற்சி மையத்திற்கும் செல்லவில்லை. பொருளாதார ரீதியாக நாங்கள் கஷ்டப்படும் குடும்பம். பயிற்சி மையத்தில் பணம் கட்டி படிக்கிற அளவுக்கு எங்க வீட்டில் வசதி கிடையாது. 2024 நான் முதல்வன் திட்டத்தில் உதவித்தொகை பெற்றேன். அதன்பிறகு தான் தேர்வில் வெற்றி பெற்றேன் என பேசுகிறார். இந்த வீடியோவை பகிர்ந்து, நீங்கள் நான் முதல்வன் சமூக வலைத்தள பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதிலிருந்த பதிவுகளை டெலிட் செய்யலாம். ஆனால், இதுபோல் ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து டெலிட் செய்யவே முடியாது என தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதோடு, அவை மக்களின் இதயங்களில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன. கடந்த ஐந்து ஆண்டுகளாக, என்னுடைய ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவி செய்யும் விதமாக தான் நான் முதல்வன் எனும் என்னுடைய கனவுத் திட்டத்தைத் துவங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும் என உருக்கமாக தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். அவருடைய இந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் பெரியளவில் கவனம் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
