பிரதமர் நரேந்திர மோதி அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ரீல் வீடியோ ஒன்றை ‘ஜென் ஸி’ (Gen Z) தலைமுறை இளைஞர்கள் கடுமையாக கேலி செய்து வருகின்றனர். இது சமூக வலைதளங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பாஜக சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
கோடிக்கணக்கான பின்தொடர்பவர்களைக் (Followers) கொண்ட பாஜகவின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் பதிவிடப்படும் செய்திகள் சில ஆயிரம் பார்வைகளை மட்டுமே பெறுகின்றன. ஆனால், வெறும் 200 பின்தொடர்பவர்களை மட்டுமே கொண்ட ஒரு சாதாரண கணக்கிலிருந்து பதிவிடப்பட்ட கேலி ரீல், 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.
இளைஞர்களின் இந்த எதிர்வினையும், இன்ஸ்டாகிராமின் அல்காரிதம் மாற்றங்களும் பாஜகவின் டிஜிட்டல் பிரச்சார உத்திகளுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன. பாரம்பரிய பிரச்சார முறைகளைத் தாண்டி, இளம் தலைமுறையினரின் ரசனைக்கு ஏற்ப பிரச்சாரத்தை மாற்றுவதில் ஆளும்கட்சிக்குச் சிக்கல் நீடிப்பதாக அரசியல் மற்றும் சமூக வலைதள ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.