நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு தொடர்பாக சீனா மீது புதிய சர்ச்சை வெடித்துள்ள செய்தி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்டை நாடான நேபாளத்திற்கு வெள்ள அபாயம் குறித்து உரிய நேரத்தில் சீனா முன் எச்சரிக்கை விடுக்கத் தவறிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து நேபாள அதிகாரிகள் தெரிவிக்கையில், “இந்த வெள்ளத்திற்கான காரணம் குறித்து சீன அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். ஆனால், இதுவரை வெள்ளப்பெருக்கிற்கான துல்லியமான காரணத்தை அவர்களாலும் கூற முடியாத சூழலே நிலவுகிறது. மேலும், இந்தச் சம்பவம் நேபாளத்தில் நடந்ததா அல்லது திபெத் பகுதியில் ஏற்பட்டதா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை” என்று கவலை தெரிவித்துள்ளனர்.
எல்லையோரப் பகுதிகளில் ஏற்படும் இயற்கை பேரிடர்கள் குறித்து அண்டை நாடுகள் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது வழக்கம். ஆனால், திபெத் எல்லையில் நீர்மட்டம் உயர்ந்தது மற்றும் இயற்கை மாற்றங்கள் குறித்த தகவல்களை சீனா உடனடியாகப் பகிராதது நேபாள மக்கள் மற்றும் அரசு இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.