காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த சில நாட்களாகக் கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக அந்நாடு முழுவதும் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீர், குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை அடியோடு முடக்கியுள்ளது.
இந்நிலையில், நேபாளத்தில் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை நிலவரப்படி 616-ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதனிடையே, வெள்ளம் வீட்டைச் சூழ்ந்ததால் வெளியேற முடியாமல், வீட்டின் பால்கனியில் செய்வதறியாது தவித்த குடும்பத்தினரின் சோகமான காட்சிகள் இணையத்தில் வெளியாகி காண்போரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.