சண்டிகரில் சமூக வலைதளப் பெண் இன்ஃப்ளூயன்சர் ஒருவர் கடத்தப்பட்டு, உயிரோடு கொடூரமாக எரிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மன்ஜீத் என்ற அந்தப் பெண், சண்டிகரில் உள்ள செக்டர் 34 பகுதிக்குத் தனக்கு அறிமுகமான ஒருவரைச் சந்திப்பதற்காகச் சென்றுள்ளார்.
அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர் மன்ஜீத்தை திடீரெனத் தாக்கி, வலுக்கட்டாயமாகக் காரில் கடத்திச் சென்றுள்ளனர். தொடர்ந்து அவரை மொரிண்டா என்ற பகுதிக்குக் கொண்டு சென்று, அங்கு வைத்து உயிரோடு எரித்துக் கொடூரமாகப் படுகொலை செய்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினர் அளித்தத் தகவலின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வந்த ஒரு பெண், திட்டமிட்டு கடத்தப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்ட இந்தக் கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்துடனும் அதிர்ச்சியுடனும் பார்க்கப்படுகிறது. இக்குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் யார், இந்தக் கொலைக்கான உண்மையான பின்னணி என்ன என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.