தமிழ்நாட்டில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில், ‘கிரிப்டோகரன்சி’ மற்றும் செயலிகள் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணமோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘எஃப்.கியூ.எல்’ (FQL) என்ற மொபைல் செயலி மூலம் முதலீடு செய்தால், வெறும் 45 நாட்களில் முதலீடு செய்த பணம் இரட்டிப்பாகக் கிடைக்கும் என்று கூறி கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் சிலருக்குக் கணிசமான தொகை லாபமாகக் கொடுக்கப்பட்டதால், அதை நம்பி ஏராளமானோர் தங்களது சேமிப்புப் பணம் மற்றும் நகைகளை அடமானம் வைத்து லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர்.
ஆனால், கடந்த சில நாட்களாக அந்தச் செயலி திடீரென இயங்காமல் போனதுடன், அதில் முதலீடு செய்த பணத்தையும் திரும்ப எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காவல் நிலையங்களை முற்றுகையிட்டுப் புகாரளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பொதுமக்கள் இது போன்ற போலியான அதிக லாபம் தரும் செயலிகளை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.