சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பான தகராறில், நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள நிரந்தர நடுவர் நீதிமன்றம் (Court of Arbitration) பாகிஸ்தானுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளதாகக் கூறப்படும் தகவல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1960-ஆம் ஆண்டு உலக வங்கியின் முன்னிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் கீழ், கிஷன்கங்கா மற்றும் ரட்லே நீர்மின் திட்டங்களை ஜம்மு காஷ்மீரில் இந்தியா செயல்படுத்தி வருகிறது.
இந்த நீர்மின் திட்டங்களின் வடிவமைப்பு ஒப்பந்த விதிகளை மீறுவதாகக் கூறி பாகிஸ்தான் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில், நடுவர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பை இந்தியா ஆரம்பத்திலிருந்தே ஏற்க மறுத்து, அதன் விசாரணைகளில் பங்கேற்கவில்லை. இந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் ஒருதலைப்பட்சமாக இந்த விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தீர்ப்பினால் இந்தியாவின் நீர்மின் திட்டங்களுக்கு உடனடி பாதிப்புகள் எதுவும் ஏற்படாது என எதிர்பார்க்கப்பட்டாலும், சர்வதேச அளவில் பாகிஸ்தான் இதனைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராகப் பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும், நடுவர் நீதிமன்றத்தின் செல்லுபடியாகும் தன்மையையே இந்தியா கேள்விக்குட்படுத்தியுள்ளதால், இருதரப்பு ஒப்பந்த விதிகளின்படியே பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்பதில் டெல்லி உறுதியாக உள்ளது.