பிரான்ஸ் நாட்டில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தத் தாக்குதலின் போது, தாய் தனது ஆடைக்குள் குழந்தையைச் சாமர்த்தியமாக மறைத்து வைத்துக் காப்பாற்றிய சம்பவம் உலகெங்கிலும் உள்ள மக்களின் நெஞ்சங்களை நெகிழ வைத்தது. எனினும், இந்த கொடூரக் குற்றத்தைச் செய்த கொலையாளிகள் யார் என்பதும் படுகொலைக்கான பின்னணியும் கண்டறியப்படாமல் இத்தனை ஆண்டுகளாக ஒரு மர்மமாகவே நீடித்து வந்தது.
இந்நிலையில், இச்சம்பவம் நடந்த இடத்திற்கு அருகிலுள்ள ஏரி ஒன்றில் இருந்து ‘லூகர்’ (Luger – மாடல் A) ரக பழமையான கைத்துப்பாக்கி ஒன்று தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த எதிர்பாராத கண்டுபிடிப்பு, முடங்கிக் கிடந்த வழக்கு விசாரணையில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது. கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கியைத் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் கொலையாளிகளைப் பற்றிய முக்கியத் தகவல்கள் கிடைக்கும் எனப் புலனாய்வு அதிகாரிகள் நம்புகின்றனர். இந்த புதிய ஆதாரம் 14 ஆண்டுகால படுகொலை மர்மத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.