தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அண்மைய உரையும், அவரது உடல்மொழியும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், அதற்கு திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற தவெக மாநாட்டில் நடிகர் விஜய், மிசா (MISA) சட்டம் குறித்தும் திமுகவின் கடந்த கால அரசியல் வரலாறு குறித்தும் விமர்சித்திருந்தார். குறிப்பாக, மிசா சிறைவாசம் குறித்துப் பேசும்போது அவரது உடல்மொழி எள்ளல் தொனியில் இருந்ததாக திமுக தரப்பில் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “யார் தம்மை கொச்சைப்படுத்திப் பேசினாலும், எள்ளல் தொனியில் கிண்டல் செய்தாலும் தியாகங்கள் நிறைந்த வரலாற்றை ஒருபோதும் மாற்றவே முடியாது” என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
திமுகவின் தியாக வரலாற்றைக் கொச்சைப்படுத்துபவர்களுக்கு மக்கள் தகுந்த நேரத்தில் பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், விஜய் – ஸ்டாலின் இடையிலான இந்த மறைமுக வார்த்தைப் போர் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.