மேற்கு வங்கத்தில் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் துர்கா பூஜையும் ஒன்றாகும். இக்காலக்கட்டத்தில் வங்காள மக்கள் தங்களின் பாரம்பரிய வழக்கப்படி அசைவ உணவுகளை உட்கொள்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளரான பாகேஸ்வர் பாபா என்றழைக்கப்படும் தீரேந்திர சாஸ்திரி, துர்கா பூஜை காலத்தில் அசைவ உணவு உண்பதற்கு எதிராகப் பேசிய கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அவரது இந்தப் பேச்சுக்கு வங்காள மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உணவுப் பழக்கம் என்பது தனிநபரின் உரிமை மற்றும் பிராந்தியக் கலாச்சாரம் சார்ந்த விஷயம் என்பதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை என எதிர்ப்பாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, தீரேந்திர சாஸ்திரி மீது காவல் நிலையத்திலும் முறைப்படி புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்ய கோரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது அம்மாநிலத்தில் பெரும் அரசியல் மற்றும் சமூகப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.