இரவில் தூங்கும் போது அறியாமலேயே பற்களை நறநறவெனக் கடிக்கும் பழக்கம் இன்றைக்குப் பலரிடமும் காணப்படுகிறது. உலகளவில் கிட்டத்தட்ட நான்கில் ஒருவருக்கு இந்தப் பழக்கம் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதில் பெரும்பாலானோருக்குத் தங்களுக்கு இப்படியொரு பாதிப்பு இருப்பதே தெரிவதில்லை என்பதே இதில் உள்ள பெரிய சிக்கலாகும்.
ஆரம்பத்தில் இது சாதாரணமான ஒன்றாகத் தோன்றினாலும், நாளடைவில் இது கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தொடர்ந்து பற்களைக் கடிப்பதால் பற்களின் எனாமல் தேய்மானம் அடைவதுடன், தாடை வலி, கடுமையான தலைவலி மற்றும் காது வலி போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், தாடை தசையில் ஏற்படும் மாற்றங்களால் ஒருவரது முக அமைப்பே மாறக்கூடும் என்பது மருத்துவ உலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அதிகப்படியான மன அழுத்தம், பதற்றம் மற்றும் தவறான தூக்க முறைகள் போன்றவை இதற்கு முதன்மைச் காரணங்களாகக் கூறப்படுகின்றன. எனவே, காலையில் எழும்போது தாடை வலி அல்லது பற்களில் கூச்சம் இருந்தால், உடனடியாகப் பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது வருமுன் காக்க உதவும்.