தமிழ்நாட்டில் புதிய தனியார் பல்கலைக்கழகங்களைத் தொடங்குவதற்காக விதிக்கப்பட்டிருந்த விதிகளில் 2 முக்கிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை உயர்கல்வித் துறையில் புதிய முதலீடுகளையும், நவீன உள்கட்டமைப்பையும் ஈர்க்கும் என்று ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.
அதேவேளையில், அரசின் இந்தச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள், மாணவர் மற்றும் ஆசிரியர் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்தத் தளர்வுகள் உயர்கல்வியை முழுமையாகத் தனியார்மயமாக்குவதற்கு வழிவகுக்கும் என்றும், ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளையும், காலம் காலமாகப் பேணப்பட்டு வரும் சமூகநீதியையும் கடுமையாகப் பாதிக்கும் என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.
இத்தகைய விதிகள் தளர்வு தமிழ்நாட்டின் உயர்கல்வித் தரத்தை உண்மையிலேயே அடுத்த கட்டத்திற்கு உயர்த்தப் போகிறதா? அல்லது கல்வியை மேலும் வணிகமயமாக்கி சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாக மாற்றப் போகிறதா? என்ற விவாதம் தற்போது கல்வித்துறையில் சூடுபிடித்துள்ளது.