தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களைத் தொடங்குவதற்கான விதிகளில் இரண்டு முக்கிய தளர்வுகளை மாநில அரசு கொண்டுவந்துள்ளது. இந்த நடவடிக்கை உயர்கல்வித் துறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் என்று ஒரு தரப்பினர் கூறினாலும், இதற்கு ஆசிரியர் மற்றும் மாணவர் அமைப்புகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அரசின் இந்தச் சட்டத்திருத்தம் உயர்கல்வியைத் தீவிரமாகத் தனியார்மயமாக்குவதற்கு மட்டுமே வழிவகுக்கும் என்று எதிர்க்கட்சிகளும், கல்விச் செயற்பாட்டாளர்களும் குற்றம் சாட்டுகின்றனர். இத்தகைய தளர்வுகளால் கட்டண உயர்வு ஏற்பட்டு ஏழை, எளிய மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்றும், இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி அம்சங்கள் கேள்விக் குறியாகும் என்றும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அதேவேளையில், இந்த புதிய விதிகள் தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறையை அடுத்தகட்டத்திற்கு உயர்த்துமா அல்லது கல்வியை மேலும் வணிகமயமாக்கி சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாக்குமா என்ற விவாதம் தற்போது பொதுவெளியில் தீவிரமடைந்துள்ளது.