தமிழக முதலமைச்சர் விஜய் நேரடியாகக் கவனித்து வரும் நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் இயங்கும் தாம்பரம் மாநகராட்சியில், மிகப்பெரிய நிதி முறைகேடு புகார் எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெண்டர் அதிகாரப்பூர்வமாகக் கோருவதற்கு முன்பாகவே, பணிகள் அனைத்தும் அவசர அவசரமாக முடிவடைந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
முறைப்படியான அரசாணை மற்றும் டெண்டர் அறிவிப்புகள் வெளியாவதற்கு முன்பே, குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்களுக்குச் சாதகமாக பணிகள் முன்கூட்டியே செய்து முடிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசு விதிகளுக்குப் புறம்பாக நடைபெற்ற இந்த முறைகேடு தொடர்பாக நகராட்சி நிர்வாகத் துறை உயர் அதிகாரிகளுக்குப் புகார்கள் சென்றடைந்த நிலையில், முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின் அடிப்படையில், தாம்பரம் மாநகராட்சி ஆணையரை உடனடியாக அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சரின் நேரடிப் பார்வையில் உள்ள துறையிலேயே இத்தகைய முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது நிர்வாக மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.