இஸ்ரேல் நோக்கிப் பறந்து கொண்டிருந்த ஃப்ளைதுபை பயணிகள் விமானத்தில் நடுவானில் அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம் குறித்த புதிய விவரங்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அரசு வழக்கறிஞர் வெளியிட்டுள்ளார். விமானத்தின் துணை விமானி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதன்மை விமானி (கேப்டன்) ஸ்மித் மச்சார் மீது கோடாரியால் திடீரெனத் தாக்குதல் நடத்தி விமானத்தைக் கைப்பற்ற முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
விமானத்தின் காக்பிட் பகுதியில் அவசர தேவைகளுக்காக வைக்கப்பட்டிருந்த கோடாரியை எடுத்த துணை விமானி, கேப்டன் ஸ்மித் மச்சார் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இருப்பினும், மிகுந்த மனதிடத்துடனும் சமயோசித புத்தியுடனும் செயல்பட்ட கேப்டன் ஸ்மித், படுகாயமடைந்த நிலையிலும் துணை விமானியைக் கட்டுப்படுத்தி, காக்பிட் கதவைத் திறந்து சக ஊழியர்களின் உதவியுடன் அவரைக் மடக்கிப் பிடித்தார்.
நடுவானில் பயணிகளின் உயிரைப் பணயம் வைத்து விமானத்தைக் கடத்த முயன்ற துணை விமானியின் இந்த வெறிச்செயல் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆபத்தான சூழலிலும் இந்திய கேப்டன் காட்டிய துணிச்சலான மற்றும் விரைவான நடவடிக்கையால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.