ஈரோட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட தனியார் நிறுவனம் ஒன்று, ‘எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் சாகும் வரை மாதம் ரூ.50,000 வழங்கப்படும்’ என்று கவர்ச்சிகரமான வாக்குறுதி அளித்து, ரூ.1,400 கோடி அளவுக்குப் பிரம்மாண்ட நிதி மோசடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் எல்லையைப் பாதுகாத்துத் தாய்நாட்டிற்காகச் சேவையாற்றிய முன்னாள் ராணுவத்தினரையே இலக்காக வைத்து இந்தச் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் தங்களின் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் இதில் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். ‘ராணுவத்தில் இரவு பகலாகப் பாடுபட்டுச் சம்பாதித்த மொத்தப் பணமும் போய்விட்டது’ எனப் பாதிக்கப்பட்ட வீரர்கள் கண்ணீருடன் வேதனை தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையிலும், பொருளாதாரக் குற்றப்பிரிவிலும் புகார்களைக் குவித்து வருகின்றனர். இந்த நெட்வொர்க் மோசடியின் பின்னணியில் உள்ள முக்கியப் புள்ளிகளைக் கைது செய்து, பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களின் பணத்தை மீட்பதற்குத் தமிழக அரசு உடனடியாகத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.