செளதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து ஏமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் திடீர் தாக்குதலால் ரியாத் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. விமான நிலையக் கட்டடங்கள் சில சேதமடைந்த நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படுகாயமடைந்தவா்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், இத்தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள செளதி அரேபியா தலைமையிலான ராணுவக் கூட்டணி, அப்பாவி பொதுமக்கள் மீதான இந்த நடவடிக்கை ஒரு “போர்க் குற்றம்” எனச் சாடியுள்ளது. சர்வதேச விதிகளுக்கு மாறாக செயல்பட்ட ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.