ஆப்கானிஸ்தானில் 230 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த 5 வயது குழந்தையை, 11 வயது சிறுவன் ஒருவன் தனது உயிரைப் பணயம் வைத்து பத்திரமாக மீட்டுள்ள சம்பவம் உலகளவில் பெரும் நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்நாட்டில் பாதுகாப்பற்ற முறையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் சிறு குழந்தைகள் விழுவது தொடர்கதையாகி வருகிறது. மிகக் குறுகலான கிணறு என்பதால், மீட்புப் பணிகளின் போது பெரியவர்களால் உள்ளே இறங்க முடிவதில்லை. இதன் காரணமாக, உடலளவிலும் மனதளவிலும் துணிச்சல் மிக்க சிறுவர்களைக் கொண்டு மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயச் சூழல் உருவாகிறது.
அந்த வகையில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன், எவ்வித பயமும் இன்றி 230 அடி ஆழம் கொண்ட குறுகலான ஆழ்துளைக் கிணற்றுக்குள் கயிறு மூலம் தலைகீழாக இறங்கியுள்ளான். கிணற்றின் அடியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவனைச் சாதுரியமாகப் பிடித்துக் கொண்டு, மீட்புக் குழுவினரின் உதவியுடன் பத்திரமாக மேலே கொண்டு வந்து சேர்த்தான்.
பெரியவர்களாலேயே செய்ய முடியாத இந்த ஆபத்தான மீட்புப் பணியை, தன் உயிரைப் பொருட்படுத்தாமல் செய்து முடித்த அந்தச் சிறுவனின் அபாரத் துணிச்சலைப் பாராட்டி, இணையதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.