மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆண்டுதோறும் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படும் துர்கா பூஜை திருவிழாவில், எதிர்பாராதவிதமாக நடந்த கூட்ட நெரிசல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு கொல்கத்தாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘சோர்பாகன்’ துர்கா பூஜை பந்தலில் சனிக்கிழமை இரவு சுமார் 7.40 மணியளவில் இக்கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வார இறுதி நாள் என்பதால், சுவாமி தரிசனம் செய்ய ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பந்தலில் திரண்டனர். இதனால் அங்கு கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத சூழலில், எதிர்பாராதவிதமாக மக்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து நெரிசலில் சிக்கினர். வெறும் 7 நிமிடங்களில் மகிழ்ச்சிகரமான திருவிழா கொண்டாட்டம், மரண ஓலமாக மாறியது.
இந்தக் கோரச் சம்பவத்தில் சிக்கி இதுவரை குறைந்தது 19 பேர் உயிரிழந்திருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் காயமடைந்த பலர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இத்துயரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.