சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 7 நீர்வாழ் பறவைகள் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பறவைகளின் மாதிரிகளை ஆய்வு செய்ததில், அவை ‘ஹெச்5என்1’ (H5N1) ரக தீவிர பறவைக் காய்ச்சல் தொற்றால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் வண்டலூர் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் தொற்று மனிதர்களுக்குப் பரவுமா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. பொதுவாக H5N1 வைரஸ் பறவைகளிடையே வேகமாகப் பரவும் இயல்புடையது. பாதிக்கப்பட்ட பறவைகள் அல்லது அவற்றின் கழிவுகளுடன் நேரடியாகத் தொடர்பில் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே இது பரவ வாய்ப்புள்ளது. மனிதர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, நன்கு கொதிக்க வைத்து சமைக்கப்பட்ட இறைச்சி மற்றும் முட்டைகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். அசைவ உணவுகளைக் கையாண்ட பிறகு கைகளை சோப்பு போட்டுச் சுத்தமாகக் கழுவுவது அவசியமாகும். பொதுமக்கள் தேவையற்ற அச்சமடையத் தேவையில்லை எனப் சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.