52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
பாகிஸ்தான் நடத்திய இரட்டை தாக்குதல் : ஆப்கானிஸ்தானில் குழந்தைகள் உட்பட 35 பேர் பலி – எல்லையில் மீண்டும் பதற்றம்

மத்திய கிழக்கில் அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் பாகிஸ்தான் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில் மறுபுறம் ஆப்கானிஸ்தான் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது 35 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பாகிஸ்தான் தரப்பில் உயிரிழந்தவர்கள் பயங்கரவாதிகள் எனக் கூறப்பட்டாலும், ஆப்கானிஸ்தான் அரசு இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பல அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.

டபுள் டாப் தாக்குதல் என்றால் என்ன?

டபுள் டாப் (Double Tap) என்பது ராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் ஒரு சர்ச்சைக்குரிய தாக்குதல் முறை ஆகும் முதலில் ஒரு இடத்தில்நடத்தப்படுகிறது. அதன் பிறகு, காயமடைந்தவர்களை மீட்க மருத்துவ குழுவினர், மீட்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் அங்கு கூடும் நேரத்தில், அதே இடத்தின் மீது மீண்டும் இரண்டாவது தாக்குதல் நடத்தப்படுவது தான் "டபுள் டாப்" தாக்குதல் எனப்படுகிறது. மனித உரிமை அமைப்புகள் இந்த முறையை கடுமையாக எதிர்த்து வருகின்றன.

தாக்குதல் எப்படி நடந்தது?

வெளியான தகவல்களின்படி இந்திய நேரப்படி அதிகாலை 12.30 மணியளவில் பாகிஸ்தான் விமானப்படை போர் விமானங்கள் பாக்டிகா, பாக்டியா மற்றும் குனார் மாகாணங்களில் உள்ள குடியிருப்புகள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது குண்டுவீச்சு நடத்தியதாக கூறப்படுகிறது.சுமார் 25 நிமிடங்கள் கழித்து, காயமடைந்தவர்களை மீட்க பொதுமக்கள் அங்கு சென்றபோது, அதே இடத்தில் மீண்டும் இரண்டாவது சுற்று நடத்தப்பட்டதாக ஆப்கானிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் விளக்கம்

கடந்த வாரம் கராச்சியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் உயிரிழந்ததற்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஜமாத்-உல்-அஹ்ரார் மற்றும் தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்புகளின் மறைவிடங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு தகவல் துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் மறுப்பு

  • ஆனால், தங்கள் நாட்டில் எந்த பயங்கரவாத முகாம்களும் இல்லை என்றும், தாக்குதலில் உயிரிழந்தவர்கள் அனைவரும் பொதுமக்களே என்றும் தாலிபான் அரசு தெரிவித்துள்ளது.
  • இந்த தாக்குதலை கோழைத்தனமான ஆக்கிரமிப்பு என்று கடுமையாக கண்டித்துள்ளது.
  • தாக்குதலில் உயிர் தப்பியவர்கள் அங்கு எந்த பயங்கரவாதிகளும் இல்லை.
  • பெண்கள், குழந்தைகள் மற்றும் கிராம மக்கள் மட்டுமே இருந்தனர். உலகத்தை தவறாக வழிநடத்த பாகிஸ்தான் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

எல்லைப் பகுதியில் தொடரும் பதற்றம்

2021-ல் தாலிபான் ஆட்சிக்கு வந்த பிறகு பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் உறவு தொடர்ந்து பதற்றமாகவே இருந்து வருகிறது. எல்லை தாண்டிய தாக்குதல்கள், பயங்கரவாத குற்றச்சாட்டுகள் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் இரண்டு நாட்டு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.இந்த சமீபத்திய தாக்குதல், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளதுடன் சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *