சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில் இருந்தே தமிழக அரசியல் களத்தில் பல அதிரடியான மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் திமுக, அதிமுக இணைய போகிறது என தொடர்ச்சியாக வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளன. இரண்டு கட்சிகளை சார்ந்த மூத்த தலைவர்கள் இந்த தகவலை மறுத்த நிலையில், தொடர்ந்து இதுபோன்ற செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்த தகவல் அனைத்திற்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் இறங்கியது. மற்றொரு பக்கம் திமுக, அதிமுக கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதற்கு முயற்சியில் இறங்கியதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதே நேரம் தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே திமுக ஆக்கப்பூர்வமாக எதிர்க்கட்சியாக செயல்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.ஆனாலும் திமுக, அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க தற்போது வரை முயற்சி செய்வதாக தவெக அமைச்சர் நிர்மல் குமார் சமீபத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் திமுக, அதிமுக கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு நாளை என்ன நடக்கிறது என என்னால் ஆருடம் சொல்ல முடியாது.ஆனால் எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என கருத்து தெரிவித்திருந்தார். அவருடைய இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பியது. திமுக, அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை மறுக்காமல் வாய்ப்புள்ளது என்பதை போன்று பேசி இருப்பதாக விவாதங்கள் நடந்தது. இப்படியான நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திமுக - அதிமுக கூட்டணி சம்பந்தமான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.அதாவது இன்றைய தினம் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய இபிஎஸ்ஸிடம் பல விதமான கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த வகையில் சமீபத்தில் திமுக, அதிமுக கூட்டு சேரும் என்று திருமாவளவன் சொல்றாரு. அதை எப்படி பார்க்குறீங்க என கேட்கப்பட்டது. அதற்கு அது அவருடைய கருத்து. தினந்தோறும் ஒன்றை அவர் சொல்றாரு. அதுல எதை எடுத்துக்கிறது என விமர்சனம் செய்தார். தொடர்ந்து அவரிடம் டிடிவி தினகரன் பேச்சு குறித்து கேட்கப்பட்டது.அதற்கு திமுக, அதிமுக கூட்டணி என்று கட்டுக்கதைகளை கட்டி விட்டிருக்கிறார்கள். அதிமுகவை பொறுத்தவரைக்கும் நாங்கள் சொல்றது தான் எங்களுடைய கருத்து. மற்றவர்களுடைய கருத்தை எல்லாம் இணைக்கக்கூடாது. ஒவ்வொருத்தருக்கும் ஒரு கருத்து இருக்கும். எங்களை பொறுத்தமட்டில் எம்ஜிஆர் அதிமுகவை துவங்கும் போது தீய சக்தி திமுக என்றுதான் ஆரம்பித்தார். அந்த நிலைப்பாட்டில் இன்று வரைக்கும் உறுதியாக இருக்கிறோம்.ஐந்தாண்டு காலம் பிரதான எதிர்க்கட்சி தலைவராக இருந்தேன். எழுச்சி பயணத்தில் திமுகவை தான் விமர்சனம் செய்தேன். சட்டமன்றத்திலும் திராவிட முன்னேற்ற கழகத்தை சுட்டிக்காட்டி தான் பேசினேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதன் மூலமாக திமுகவுடன் என்றைக்கும் அதிமுக கூட்டணி அமைக்காது என்பதை உறுதி செய்துள்ளார். அதோடு திமுக, அதிமுக கூட்டு களவாணிகள் என்று சமீபத்தில் முதல்வர் ஜோசப் விஜய் பேசி இருந்தார்.அதற்கும் பதிலடி கொடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்ட விஜய் தான் களவாணி என சரமாரியாக விமர்சனம் செய்துள்ளார். அவருடைய இந்த பேச்சுக்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெருமளவில் கவனம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

