52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
சென்னையின் முக்கிய நீராதாரம் ஆபத்தில் ரூ.56 கோடி திட்டம் மந்தம் -நிதி ஒதுக்கியும் முடங்கிய ரெட்டேரி ஏரி சீரமைப்பு பணி!

சென்னையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றாக விளங்கும் ரெட்டேரி ஏரியை சீரமைத்து அதன் நீர் சேமிப்பு திறனை அதிகரிக்கும் நோக்கில் கடந்த 2024-ஆம் ஆண்டு மே மாதம் தமிழக அரசு ரூ.43 கோடி நிதி ஒதுக்கியது. இந்த திட்டத்தின் மூலம் ஏரியின் கொள்ளளவை 0.32 டிஎம்சியில் இருந்து 0.42 டிஎம்சியாக உயர்த்த திட்டமிடப்பட்டு, நீர்வளத்துறை சார்பில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன.

ரெட்டேரி ஏரி சீரமைப்பு பணிகள்

பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 2024 அக்டோபர் மாதத்தில் அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரெட்டேரி ஏரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, ஏரியின் கரைப்பகுதிகளில் நடைபாதைகள், பூங்காக்கள், நுழைவாயில் வசதிகள் உள்ளிட்ட அழகுபடுத்தும் பணிகளுக்காக கூடுதலாக ஒதுக்கப்பட்டது. இதனால் திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.56.12 கோடியாக உயர்ந்தது. ஆனால், ஆரம்பத்தில் வேகமாக நடைபெற்ற பணிகள் பின்னர் மந்தமடைந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பணிகள் முற்றிலும் முடங்கியதால் ஏரியின் பராமரிப்பும் நீர் சேமிப்பு திறனும் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது ஏரியில் கழிவுநீர் கலப்பதால் அதன் நிலை மோசமடைந்து வருவதாகவும், இது எதிர்காலத்தில் நீராதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

ரூ.56 கோடி நிதி ஒதுக்கீடு

இதுகுறித்து மாதவரம் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ரெட்டேரி சீரமைப்பு பணிகள் தொடங்கிய நாள் முதலே மந்தகதியில்தான் நடைபெற்றதாக தெரிவித்தனர். நீர்வளத்துறை அதிகாரிகள் திட்டத்தில் போதிய அக்கறை காட்டவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.மேலும், ரெட்டேரிக்கு பிறகு தொடங்கப்பட்ட கோட்டூர், பகுதிகளில் உள்ள ஏரிகளின் புனரமைப்பு பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டன. ஆனால் ரெட்டேரி திட்டம் மட்டும் இன்னும் முழுமை பெறாதது கேள்விகளை எழுப்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.

சென்னை குடிநீர் ஆதாரமாக ரெட்டேரி ஏரி

ஏரியில் இருந்து அகற்றப்பட்ட மண் எங்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்தும் தெளிவான தகவல் இல்லை எனவும், அந்த மண் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அவர்கள் கூறினர். இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மாதவரம் தொகுதி எம்எல்ஏவுக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். ரெட்டேரி ஏரியை முழுமையாக சீரமைத்து அதிகளவில் தண்ணீர் சேமிக்கும் வகையில் மாற்ற வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் எனவும் கூறினர்.

பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்றுமா புதிய அரசு

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் ரெட்டேரி ஏரி முக்கிய பங்காற்றக்கூடியது. இந்த ஏரியில் போதுமான அளவு தண்ணீர் சேமிக்கப்பட்டால், நகரின் குடிநீர் தேவையை பல நாட்களுக்கு பூர்த்தி செய்ய முடியும். எனவே புதிய அரசு இந்த பணிகளை விரைந்து முடித்து, மாதவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் நீராதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *