
சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்பாக பல எதிர்பாராத சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருகிறது. குறிப்பாக அதிமுக சார்ந்த எம்எல்ஏக்கள் தொடர்ச்சியாக தங்களது பதவியை ராஜினாமா செய்து கொண்டிருக்கிறார்கள். அதோடு கட்சியில் இருந்தும் விலகி வரும் நிலையில், அதிமுக ஒரு சவாலான காலக்கட்த்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவில் நிலவி வரும் பிரச்சனைகள் குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அதிமுகவில் மூத்த நிர்வாகியாக இருந்த ஓ. பன்னீர்செல்வம், முதலமைச்சர் பொறுப்பும் வகித்து வந்துள்ளார். இவர் கட்சியின் கட்டுபாட்டை மீறி செயல்பட்டதாக, கட்சியில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. இதனையடுத்து மீண்டும் கட்சியில் இணைவதற்கு பலமுறை முயற்சி செய்தும், அது நடக்கவில்லை. இதனால் அவருடைய அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என அரசியல் வட்டாரத்தில் பல விதமான விவாதங்கள் நடந்தது.இந்நிலையில் அதிரடி திருப்பமாக திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம். இத்தனை ஆண்டு காலமாக அதிமுகவில் பயணித்து வந்த அவர், அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தது மிகப்பெரிய அளவில் பேசு பொருளானது. இதனை தொடர்ந்து திமுக வேட்பாளராக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் களமிறங்கி வெற்றியும் பெற்றார் ஓபிஎஸ். இதனையடுத்து இன்று சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல் குறித்து பேசியுள்ளார். அதாவது சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்து வெளியே வந்த ஓபிஎஸ்ஸிடம், உங்களை அதிமுகவில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறி வருகிறார்கள். நீங்கள் இருந்த கட்சி. இதை எப்படி பார்க்குறீங்க என கேட்கப்பட்டது. அதற்கு என்னை தொடர்ந்து அல்ல. நான் வெளியேற்றப்பட்டேன் என்றார். அதன்பின்னர் அவரிடம் நீங்கள் திமுகவில் இணைந்ததற்கு பின்பாக பலரும் அதிமுகவில் இருந்து வெளியேறி மாற்றுக்கட்சிக்கு செல்கிறார்கள். குறிப்பாக இந்த தேர்தல் தோல்விக்கு பிறகு என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆனாலும் விடாமல் அதிமுக தொடர்ந்து கரைந்து கொண்டு வருகிறது என்ற கருத்தும் உள்ளது. அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என அடுக்கடுக்கான கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினார்கள்.அதற்கு பொதுச்செயலாளரிடம் தான் அதைப்பற்றி கேட்க வேண்டும் என கூறிவிட்டு கிளம்பி விட்டார் ஓபிஎஸ். அதே நேரம் அதிமுகவில் இருந்து நானாக வெளியேறவில்லை. வெளியேற்றப்பட்டேன் என்ற கருத்தையும் அழுத்தமாக பதவு செய்துள்ளார் ஓபிஎஸ். இதனிடையில் இன்றைய தினம் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி தனித்தனியாக வந்தனர். இது பலவிதமான விவாதங்களை கிளப்பி இருக்கிறது.மேலும் எடப்பாடி பழனிசாமி மீது தொடர் விமர்சனங்களை முன்வைத்து வரும் சி.வி. சண்முகத்தை அதிமுகவை சார்ந்த மூத்த நிர்வாகிகள் தனியாக சந்தித்து பேசியுள்ளனர். எஸ்.பி. வேலுமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் இல்லத்தில் வைத்து அவரை சந்தித்து இருக்கிறார்கள். இதனால் அதிமுகவில் அடுத்ததாக என்ன நடக்க போகிறது என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
