
சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றைய தினம் நடைபெற்ற நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் உரையை ஆளுநர் வாசித்தார். இதனையடுத்து அடுத்த மூன்று நாட்கள் மீதான விவாதம் நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். அதன்படி நாளை மற்றும் திங்கள், செவ்வாய்க்கிழமை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதனிடையில் ஆளுநரின் உரை குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு விதமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.இந்நிலையில் ஆளுநர் உரையில் தமிழக வெற்றி கழகத்தின் அரசினை புகழ்ந்ததுடன், பல்வேறு விதமான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒன்றிய அரசின் சார்பில் நடத்தப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்த பிறகு, நடத்தப்படும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் திமுக ஐடி விங்கு இந்த அறிவிப்பு குறித்து விமர்சனங்களை முன்வைத்து பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளது.அதாவது, கடந்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியிட்ட அறிக்கையில், சாதிவாரி கணக்கெடுப்பை தான் ஒன்றிய அரசு நடத்த வேண்டும். அதற்கு முன்னோட்டமாக caste survey என்ற ஆய்வினை மாநில அரசே நடத்தலாமே? அதற்கு தங்களிடம் அதிகாரம் இல்லை என்று தற்போதைய ஆட்சியாளர்கள் சொல்ல போகிறார்களா? என கேள்வி எழுப்பி இருந்தார். அதோடு மற்ற மாநிலங்களை போல் சாதி வாரிக் கணக்கெடுப்புக்கான ஆய்வை கூட தமிழகத்தில் ஏன் நடத்தவில்லை.சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்துவதில் ஒன்றிய மற்றும் தமிழக ஆட்சியாளர்கள் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றார்கள் என்பதை நன்கு மக்கள் அறிவர் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் தற்போது ஆளுநர் உரையில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்த பிறகு, சமூக நீதி கணக்காய்வினை தமிழ்நாடு அரசு நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை இரண்டையும் ஒப்பிட்டு விமர்சனங்களை முன்வைத்துள்ளது. இது சம்பந்தமாக திமுகவின் ஐடி விங்கின் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், ஆட்சியாளர்களின் 'சமூக நீதி வேடம்' கலைகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, ஒன்றிய அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பை தான் நடத்த வேண்டும். ஆனால் அதற்கு முன்னோட்டமாக உள்ள Caste Survey என்ற ஆய்வினை மாநில அரசே நடத்தலாமே? அதற்கு தங்களிடம் அதிகாரம் இல்லையென தற்போதைய ஆட்சியாளர்கள் கூற போகிறார்களா என விஜய் வீரவசனம் பேசினார்.ஆனால் இன்று ஆட்சி பொறுப்பேற்றதற்கு பின்பாக, சமூகநீதி கணக்காய்வினை மேற்கொள்ளாமல் ஒன்றிய அரசுக்கு பின்னால் பதுங்கிக் கொள்வது ஏன்? என்ற கேள்வி அந்த பதிவில் முன்வைக்கப்பட்டுள்ளது. அதோடு இதற்குப் பெயர் இரட்டை வேடமா? அல்லது பச்சோந்தித்தனமா? எனவும் கடுமையான விமர்சனங்கள் திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், விவாதங்களும் கிளம்பியுள்ளது.
