
சட்டமன்ற கூட்டத்தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நேற்றைய தினம் ஆளுநர் உரை வாசித்த நிலையில், அதன் மீதான விவாதம் இன்றைய தினம் துவங்கியது. இதனிடையில் துவங்கிய நிலையில், சட்டமன்ற நேரலை துண்டிக்கப்பட்டது. இது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் பேசு பொருளாகியுள்ளது. இந்நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் சட்டமன்றத்தில் நடந்தவை குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசியுள்ளார்.முன்னதாக சட்டப்பேரவையில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு செய்து வரும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுவரை சட்டமன்ற நிகழ்வுகள் நேரலையில் ஒளிப்பரப்பாகின. ஆனால் அதனை தொடர்ந்து ஆளுநர் மீதான விவாதம் துவங்கிய நிலையில் நேரலை நிறுத்தப்பட்டது. இது கடுமையான எதிர்மறையான விமர்சனங்களை கிளப்பியுள்ளது.இந்நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். சிவசங்கர் செய்தியாளர்களிடம் பேசும்போது, சட்டமன்றத்தில் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத நிலையில் உள்ளார்கள் என்ற காரணத்தால் தான் இன்றைக்கு நேரலை செய்யாமல் தவிர்த்து இருக்கிறார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சட்டமன்றத்தில் நான் தெரிவித்த கருத்துக்களை உங்களிடம் தற்போது பகிர்ந்து கொள்கிறேன்.ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த அனைத்தும் திமுக ஆட்சி காலத்தில் செய்ல்படுத்தப்பட்ட திட்டங்கள். அதோடு இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டது தொடர்பாகவும் கேள்வி எழுப்பினேன். ஆளுநர் இணக்கமான முறையில் உரை நிகழ்த்தியதாக சபாநாயகர் நன்றி தெரிவித்துள்ளார். அதோடு சரித்திர நிகழ்வு என ஆளுநர் பதிவிட்டுள்ளார். இது பாஜகவுடன் மறைமுக கூட்டணியில் இருப்பதை பிரதிபலிக்கும் விதமாக இருப்பதாக சட்டமன்றத்தில் பதிவு செய்தேன். அது மக்களிடம் நேராக சென்றடையும் என எதிர்பார்த்த நிலையில், நேரலை செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார் சிவசங்கர். மேலும், எதிர்க்கட்சி தலைவர் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் போது பேசியது மக்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன்பின்னர் முதல்வர் வீட்டுக்கு சென்று ட்விட்டரில் பதிவிட்டார். இதனால் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு முதலமைச்சரால் பதிலளிக்க முடியாததால்தான் நேரலை துண்டிக்கப்பட்டதாக கருதுகிறோம் என்றார்.மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்தும் பேரவையில் கேள்வி எழுப்பினேன். பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்து இருக்கிறார்கள். எனவே அதற்கு வாய் திறக்க வேண்டும் என வலியுறுத்தினோம். முதல்வர் இன்றைக்கும் பதில் சொல்லவில்லை. காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சர் அவர்தான். ஆனால் அவர் பதில் சொல்லாமல், காவல்துறைக்கு நிழல் அமைச்சர் போல ஆதவ் அர்ஜூனா பதில் சொல்லி கொண்டிருக்கிறார்.முதல்வர் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்பது தான் எதிர்க்கட்சி என்ற முறையில் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் எனவும் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் பேசுகையில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து கேள்வி எழுப்பினால் சம்பந்தமில்லாமல் கொளத்தூர் பற்றியெல்லாம் பேசி திசை திருப்பினார்கள். அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். துறை ரீதியான செயல்பாடுகளுக்கு ஆறு மாதம் அவகாசம் எடுத்து கொள்ளலாம். தினந்தோறும் நடக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் பற்றி எப்படி கேள்வி எழுப்பாமல் இருக்க முடியும் எனவும் சிவசங்கர் கேள்விகளை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
