
கர்நாடக சட்டமன்ற மேலவை உறுப்பினர் தேர்தல்
கர்நாடக சட்டமன்ற மேலவையில் உள்ள 7 உறுப்பினர்களின் பதவிக் காலம் விரைவில் நிறைவடைகிறது. இதையடுத்து, சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் ஆளும் காங்கிரஸ் சார்பில் 5 வேட்பாளர்கள், எதிர்க்கட்சியான பாஜக சார்பில் 2 வேட்பாளர்கள், அதன் கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் 1 வேட்பாளர் என மொத்தம் 8 பேர் போட்டியிட்டனர்.
சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை
மொத்தம் 224 இடங்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில், 222 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர்.
- ஆளும் காங்கிரஸ் - 135 எம்எல்ஏக்கள்
- சுயேட்சை - 5 எம்எல்ஏக்கள்
- பாஜக - 62 எம்எல்ஏக்கள்
- மதச்சார்பற்ற ஜனதா தளம் - 18 எம்எல்ஏக்கள்
எம்எல்சி தேர்தலில் காங்கிரஸ் வெற்றி
இந்த நிலையில், கடந்த ஜூன் 18 ஆம் தேதி சட்டப் பேரவை வளாகத்தில் 7 மேலவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. மாலையில் வாக்குகள் எண்ணப்பட்டு, அப்போதே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் ஒரு உறுப்பினர் தேர்வாக குறைந்தபட்சம் 27 வாக்குகள் தேவை. அதன்படி,
- பி. கே. ஹரிபிரசாத் - 30 (காங்கிரஸ் வேட்பாளர்)
- பி. வி. மோகன் - 29 (காங்கிரஸ் வேட்பாளர்)
- பி. எஸ். சிவண்ணா - 30 (காங்கிரஸ் வேட்பாளர்)
- திப்பனப்பா காமகனூர் - 30 (காங்கிரஸ் வேட்பாளர்)
- வினய் கார்த்திக் - 32 (காங்கிரஸ் வேட்பாளர்)
- ஆர். ரகு - 20 (பாஜக வேட்பாளர்)
ஆகியோர் வெற்றிப் பெற்றனர். ஆனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் கோவிந்தராஜு வெறுமனே 14 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். இதன் மூலமாக ஆளும் காங்கிரஸ் அதன் பலத்தை விடவும் 11 வாக்குகள் கூடுதலாகப் பெற்று 151 வாக்குகளைப் பெற்று, 7 இடங்களில் 5 இடங்களில் எதிர்பாராதவிதமாக வெற்றி பெற்றுவிட்டது.
ஆர்டர் போட்ட மேலிடம்
இந்த நிலையில், சட்டமன்ற மேலவைத் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியில் இருக்கும் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் 11 பேர் கட்சி மாறி வாக்களித்தது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதை கட்சி மேலிடம் தீவிரமாக கருத்தில் கொண்டுள்ளது.மேலும், இது குறித்து விளக்கமளிப்பதற்காக கர்நாடக மாநிலத் தலைவர் பி. ஒய். விஜயேந்திரா, எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா மற்றும் மாநிலப் பொறுப்பாளர் ராதாமோகன் தாஸ் அகர்வால் ஆகியோரை ஜூன் 23 அன்று டெல்லிக்கு வருமாறு பாஜக தலைவர் நிதின் நபின் அழைத்துள்ளார்.
உண்மையை கண்டுபிடிக்க 3 பேர் கொண்ட குழு
கட்சி மாறி வாக்களித்துள்ளதால், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான மதசார்ப்பற்ற ஜனதா தளம் இடையே உள்ள பிளவுகளை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. இதற்கு மத்தியில், கட்சியின் உத்தரவை மீறி எம்எல்ஏக்கள் ஏன் வாக்களித்து உள்ளனர் என்பதை கண்டுபிடிக்க 3 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு ஜூன் 25க்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க உள்ளது.
தர்மஸ்தலாவில் சட்டமன்றக் கட்சிக் கூட்டம்
ஆனால், குழுவால் இந்த பிரச்சனையை கண்டுபிடிப்பது கடினம் என்பதை உணர்ந்துக் கொண்ட பாஜக கட்சிக்குத் துரோகம் செய்த எம்எல்ஏக்களை கண்டுபிடிக்க ஒரு புது வழிமுறையை கையில் எடுத்துள்ளது. அதாவது, தர்மஸ்தலாவில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்றா ஸ்ரீ மஞ்சுநாதேஸ்வரர் கோவிலில் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக மாநில பாஜக தலைவர் பி. ஒய். விஜயேந்திரா தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் அனைத்து எம்எல்ஏக்களும் கலந்துக் கொள்ள இருக்கின்றனர்.
கோவிலில் வைத்து எம்எல்ஏக்களிடம் சத்தியப்பிரமாணம்
அனைவரிடமும் கோவிலில் வைத்து 'நான் கட்சிக்கு துரோகம் செய்யவில்லை. பாஜகவிற்கு தான் வாக்களித்தேன்' என்று சத்தியப்பிரமாணம் எடுக்க உள்ளனர். இங்குள்ள மூலவரான மஞ்சுநாதப் பெருமான் உண்மையைக் காப்பவர் என்றும், கோவிலில் பொய் சொல்லி யாரும் தப்பித்துவிட முடியாது என்றும் பரவலாக நம்பப்படுகிறது. எனவே, இது ஒரு இரகசிய வாக்கெடுப்பு என்பதால், வேறு வழியில்லை. உண்மையை அறிந்துகொள்ள இதுவே எஞ்சியுள்ள ஒரே வழி என்றும் தெரிவித்துள்ளார்.
