திமுகவிற்கு எதிராக மாணிக்கம் தாகூர்
ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும். திமுகவினர் தங்களை மோசமாக நடத்தினர் போன்ற எதிர்பார்ப்புகளுக்கும், விமர்சனங்களுக்கும் நல்ல வாய்ப்பாக அமைந்தது. தேர்தலுக்கு முன்னர் திமுகவிற்கு பெரும் குடைச்சலாக இருந்த மாணிக்கம் தாகூர் தற்போது தமிழக கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் திமுகவிற்கு எதிராக அடித்து ஆடுவதற்கு தவெகவிற்கு காங்கிரஸ் பலமாக மாறியிருக்கிறது.இதற்கு முன்பிருந்த மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை திமுக மீது மென்மையான போக்கை கடைபிடித்து வந்தவர். அக்கட்சியின் உடன் மிக நெருக்கமாக பயணித்தவர் என்றும் சொல்லலாம். வேட்பாளர் தேர்வில் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அடுத்தகட்டமாக கட்சி மாறுவதற்கும் வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.
மாணிக்கம் தாகூர் அடுத்தகட்ட பிளான்
- காங்கிரஸ் என்றாலே கோஷ்டிகள் நிறைந்த கட்சி. கூட்டம் நடத்தினாலே வேஷ்டிகள் கிழியும். நாற்காலிகள் உடையும் என்பர். இதற்கு மத்தியில் எப்படி கட்சியை வழிநடத்தி கொண்டு செல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
- மாணிக்கம் தாகூருக்கு வயது 51. தமிழக முதலமைச்சர் விஜய்யை விட ஒரு வயது குறைவு. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை விட 3 வயது மூத்தவர். எனவே இளம் தலைவருக்கு மாநிலத் தலைவர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சிக்கு புத்துயிர் ஊட்டும் சூழல் உருவாகும்.
- ஏற்கனவே இரண்டு அமைச்சர் பதவிகளை பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளனர். தினசரி ஏராளமான மக்கள் நேரில் சந்திக்கின்றனர். தங்கள் குறைகளை தீர்த்து வைக்குமாறு மனுக்கள் அளித்து வருகின்றனர். இதுபோன்ற காட்சிகளை 1967ஆம் ஆண்டிற்கு பின்னர் முதல்முறை தமிழகம் காண்கிறது.
- மாணிக்கம் தாகூர் தலைமையில் காங்கிரஸ் இரண்டு விஷயங்களை செய்யும் என எதிர்பார்க்கலாம். ஒன்று, உள்ளாட்சியில் கூடுதல் இடங்களை கேட்டு பெற்று அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்துவது. இரண்டு, அடுத்து வரவுள்ள மக்களவைத் தேர்தலில் போதிய இடங்களை பெற்று தங்களை வலுவான நிலையில் வைத்திருப்பது.
- இதுதவிர சட்டமன்றத் தேர்தல்களில் திமுக கூட்டணியை காட்டிலும் கூடுதல் இடங்களை கேட்டு பெறுவது.
தவெகவிற்கு காங்கிரஸ் கொடுக்கும் நெருக்கடி
இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது. அதாவது, மாணிக்கம் தாகூர் வருகையும், காங்கிரஸ் கட்சியின் எழுச்சியும் ஒருபுறம் வரவேற்கத்தக்கவை. மறுபுறம் தவெக உஷாராக இருக்க வேண்டும். ஏனெனில் அடுத்து வரும் தேர்தல்களில் கூடுதல் இடங்களை கேட்டு நச்சரிப்பர். பேச்சுவார்த்தை இழுபறியாகும். விஜய்க்கு ஒருவித நிர்பந்தம் ஏற்படும்.இதற்கு முந்தைய வரலாறுகளை திரும்பி பார்த்தால் புரிந்து கொள்ளலாம். காங்கிரஸ் கட்சி தங்களுக்கு என்ன பலம் இருக்கிறதோ, அதைவிட பல மடங்கு எண்ணிக்கையில் சீட் கேட்பர். இவற்றை எல்லாவற்றையும் எப்படி சமாளிக்க போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி எனக் குறிப்பிட்டுள்ளார்.

