திமுக, அதிமுக இணைந்து ஆட்சி அமைப்பதற்கு முயற்சி செய்ததாக ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகம் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. குறிப்பாக தற்போது வரை இந்த முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டி கொண்டிருக்கின்றனர். அதே நேரம் தவெக ஆட்சியில் நடக்கும் குற்றச்சம்பவங்களை திசை திருப்பும் விதமாக இந்த வதந்திகளை பரப்புகின்றனர் என திமுக, அதிமுகவினர் தவெகவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் திமுக ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக திட்டமிட்டார் என தவெகவினர் முன்வைத்து குற்றச்சாட்டுகளுக்கு கடுமையாக எதிர்வினையாற்றி அதிமுக முன்னாள் அமைச்சர் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க முயற்சி செய்தார் என்று வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் கற்பனை கதைகளை சொல்லி வருகிறார்கள்.ஐந்து ஆண்டுகளில் 5 கட்சிகளுக்கு தாவிய அமைச்சர் நிர்மல்குமார், அதிமுகவை பற்றி பேசுகிறார். தவெகவுக்கு அதிமுகவினர் செல்வதை நியாயப்படுத்துவதற்கு திட்டமிட்டு கட்டுக்கதை பரப்பப்படுகிறதோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது. இபிஎஸ்ஸை முதல்வராக்க மு.க. ஸ்டாலின் பேசியதை அருகிலிருந்து பார்த்ததை போலவே பேசுகின்றனர். இது வெறும் கட்டுக்கதை மட்டுமே என திட்டவட்டமாக மறுத்துள்ளார்.மேலும், எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலினும் இணைந்து பேசினார்கள். இபிஎஸ்ஸை முதல்வர் ஆக்குவதற்கு பேசி முடித்து, பொன்னாடை போர்த்தி, பூச்செண்டு கொடுத்து. ஒப்பந்தம் போட்டு அப்போது இவர்கள் பக்கத்தில் இருந்து பார்த்ததை போன்று பேசுவது அரசியல் மாண்பு இல்லை. மரபு கிடையாது. ஆகவே தவெகவில் உள்ள அரைவேக்காடு அமைச்சர்களே, இனியும் ஆள் பிடிக்கும் வேலையை நியாயப்படுத்துவதற்காக இதுபோன்ற அவதூறுகளை பரப்ப கூடாது.இனிமேலும் முதலமைச்சராக இபிஎஸ் பொறுப்பேற்க திமுக ஆதரவளிக்க நடவடிக்கை எடுத்தது என்ற கற்பனை கதைகளை கட்டவிழித்து விடுவதை நீங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுப்பதாக காட்டமாக அந்த வீடியோவில் ஆர்.பி. உதயகுமார் பேசியுள்ளார். அவரின் இந்த கடுமையான விமர்சனங்கள் அரசியல் களத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த விராலிமலை விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர் இருவரும் திமுக ஆதரவுடன் இபிஎஸ் முதலமைச்சராக முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டினை முன்வைத்தார். இது பிடிக்காமலே தாங்கள் அதிமுகவை விட்டு விலகி விட்டதாகவும் விமர்சனம் செய்தனர். இந்நிலையில் அதிமுகவில் இருந்து தவெகவில் இணைவதை நியாயம் கற்பிப்பதற்காகவே அவர்கள் இதுபோன்ற பேசி வருவதாக ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.இதற்கிடையில் இரு விஜயபாஸ்கர்களும் நாளைய தினம் ஆளுங்கட்சியான தவெகவில் இணையவுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இரண்டு தரப்பில் இருந்தும் வந்து விட்டது. மாமல்லபுரத்தில் தனியார் விடுதி ஒன்றில் தங்களின் ஆதரவாளர்களுடன் சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் இருவரும் தவெகவில் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

