52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
அதிமுகவில் இருந்து விலகுகிறேன்: வைகைச் செல்வனின் உருக்கமான கடிதம் – என்ன சொல்லிருக்கார் தெரியுமா?

அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அனைவரும் விலகி வருவதால் கட்சியினர் அனைவரும் மிகுந்த அதிருப்தி மற்றும் கவலையில் உள்ளனர். நேற்றைய தினம் அதிமுகவின் முக்கிய முகங்களாக இருந்த விஜயபாஸ்கர்கள் இருவரும் ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இந்த அதிர்ச்சி மறைவதற்கு முன்பாகவே, மீண்டும் ஒரு பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது.அதாவது, அதிமுகவின் செய்தித் தொடர்பு முதன்மை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தவர் வைகைச் செல்வன். ஊடகங்களில் அதிமுகவின் முக்கிய முகமாக விவாதங்களில் பங்கேற்றுள்ளார் இவர். இந்நிலையில் அதிமுகவில் இருந்து அடுத்தடுத்து விலகி வரும் முக்கிய நிர்வாகிகள் பட்டியலில் வைகை செல்வனும் இணைந்துள்ளனர். அவர் அதிமுகவில் இருந்து விலகுவதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும், ஒரு தலைவர் தானே அழிந்தால் கூட தனது கொள்கைகளும், இயக்கமும் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் இயக்கமும், தொண்டர்களும் அழிந்தால் கூட தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டுமென நினைப்பவர் நல்ல தலைவராக இருப்பதில்லை என எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.நான் தேர்தல் களத்தில் தனித்து விடப்பட்ட நிலையிலும் கூட, அதிமுகவுக்காக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டேன். ஆனால் மரணத்தை விடவும் புறக்கணிப்பு கொடியது என்பதை உணர்ந்துக் கொண்டேன். மாணவப் பருவம் தொட்டு ரத்தமும், சதையுமாக இருந்த இயக்கத்தோடு பணியாற்றி, தற்போது விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை எண்ணிப் பார்க்கையில் என் மனதில் உண்டாகும் வலியை வார்த்தைகளால் வடிக்க முடியவில்லை.இதுக்குறித்து நேரம் வரும்போது இன்னும் பேசுகிறேன் என தன்னுடைய விலகல் குறித்து கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார் வைகை செல்வன். அதோடு புதிய இடத்தில் நடுவதற்கு புடுங்கிப் போன செடியில் இருக்கும் மண்ணை போன்று இந்த இயக்கத்திற்காக ஆற்றிய எனது பழைய நினைவுகளை என்ன செய்வது என்று எனக்கே தெரியவில்லை எனவும் உருக்கமாக தன்னுடைய விலகல் கடிதத்தில் தெரிவித்துள்ளார் வைகைச் செல்வன்.அதிமுகவில் இருந்து விலகுபவர்கள் வரிசையாக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வரும் நிலையில், வைகை செல்வனும் தவெக நோக்கி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நேற்றைய தினம் தங்களுடைய ஆதரவாளர்களுடன் விராலிமலை சி. விஜயபாஸ்கர், கரூர் எம். ஆர். விஜயபாஸ்கர் இருவரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். அப்போது டெல்டாவில் அதிமுக என்ற கட்சியே காணாமல் போய்விட்டது என சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.மேலும் டெல்டாவில் மிகப்பெரிய அளவில் இணைப்பு விழா ஒன்றும் நடக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதில் அதிமுகவை சார்ந்த பலரும் தவெகவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையில் நேற்றைய தினம் அதிமுக சார்பாக திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய்யை எதிர்த்து போட்டியிட்டவர் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து தவெகவில் அவர் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *