52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
அரசுப் பள்ளிகளில் திடீரென குறைந்த 2.07 லட்சம் மாணவர்கள்! ஷாக் கொடுத்த புள்ளிவிவரம்.. அன்புமணி ராமதாஸ் அதிரடி எச்சரிக்கை!

தமிழகக் கல்வித்துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள மத்திய அரசின் புதிய புள்ளிவிவரங்கள் குறித்து, பாட்டாளி மக்கள் கட்சி (PMK) தலைவர் மருத்துவர் தமிழக அரசுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.கடந்த ஓராண்டில் மட்டும் தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிக மோசமாகச் சரிந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இதனை ஒரு எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு தமிழக அரசு உடனடியாக போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3 ஆண்டுகளில் 7.39 லட்சம் வீழ்ச்சி

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3 ஆண்டுகளில் 7.39 லட்சம் வீழ்ச்சி:ஆசிரியர்கள், கட்டமைப்பை பெருக்காமல் அரசு பள்ளிகளுக்கு புத்துயிரூட்ட முடியாது!தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் 1.15 லட்சம் குறைந்திருப்பதாகவும், அதே நேரத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 2.07 லட்சம் வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும் மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதை தமிழ்நாடு அரசு எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பு வெளியிட்ட தரவுகளில் தான் இந்த புள்ளிவிவரங்கள் இடம் பெற்றுள்ளன. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பதைப் போல, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவது பாட்டாளி மக்கள் கட்சிக்கு தெரிந்த ஒன்று தான் என்பதால் இந்த புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியளிக்கவில்லை. இன்னும் கேட்டால் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், உண்மையில் கடந்த 10 ஆண்டுகளாகவே சில விதிவிலக்குகளைத் தவிர இதே நிலை தான் தொடர்கிறது.அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை கடந்த 2024-25ஆம் ஆண்டில் 45 லட்சத்து10,612 ஆக இருந்தது. 2025-26 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 43.03 லட்சமாக குறைந்து விட்டது. அதாவது ஒரே ஆண்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 2.07 லட்சம் குறைந்துள்ளது.இதற்கு முன் 2022-23ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்து 42,026 ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடும் போது 3 ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 7.39 லட்சம் குறைந்துள்ளது.2015-16ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை 75.52 லட்சமாக இருந்தது. ஆனால், 11 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 32 லட்சத்து 49 ஆயிரம் குறைந்திருக்கிறது. அதாவது 11 ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 43.02% குறைந்துள்ளது.அதே நேரத்தில் கடந்த ஆண்டில் மட்டும் தனியார் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை 60.26 லட்சத்திலிருந்து 62.03 லட்சமாக, அதாவது 1.77 லட்சம் அதிகரித்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளைக் கணக்கில் கொண்டால் 36.56 லட்சமாக இருந்த தனியார் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை இப்போது 62.03 லட்சமாக அதிகரித்து விட்டது. அரசு பள்ளிகளின் வீழ்ச்சியில் தான் தனியார் பள்ளிகள் வளருகின்றன. இதை நினைத்து கவலைப்படாமல் இருக்க முடியாது.அரசு பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததும், ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதும் தான் இதற்கு காரணம் ஆகும். அரசு பள்ளிகளில் ஒரு லட்சத்திற்கும் கூடுதலான வகுப்பறைகளுக்கு ஆசிரியர்கள் இல்லாத சூழலில் அரசு பள்ளிகளை எவ்வாறு மேம்படுத்த முடியும்? எவ்வாறு புத்துயிரூட்ட முடியும்? இந்த உண்மையை உணர்ந்து கொண்டு அரசு பள்ளிகளில் கட்டமைப்பை வலுப்படுத்தவும், ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். @CMOTamilnadu என பதிவிட்டு உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *