ஆந்திரப் பிரதேசத்தில் பஞ்சாயத்து ராஜ் உதவிப் பொறியாளர் குடும்பத்தைத் தற்கொலைக்குத் தூண்டியதாகக் குற்றம்சாட்டப்பட்ட ஷேக் சாதிக் கான் என்பவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். வழக்கு விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக, அவர் தனது மொபைல் போன், சிம் கார்டு மற்றும் ஏடிஎம் கார்டுகள் என எந்தவொரு மின்னணு தடயத்தையும் பயன்படுத்தாமல் சாமர்த்தியமாகத் திட்டமிட்டு ரயிலேறி உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டிற்குத் தப்பிச் சென்றார்.
காவல்துறையின் டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்புகளுக்குச் சிக்காமல் தப்ப நினைத்த அவரைப் பிடிக்கச் சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்கப்பட்டது. எந்தவித நேரடித் தொடர்பும் இல்லாத நிலையிலும், காவல்துறையினர் நவீனத் தொழில்நுட்ப ரீதியான மாற்று உத்திகளைக் கையாண்டு, சுமார் 5 மாநிலங்களில் அவரைத் தீவிரமாகக் கண்காணித்து தேடி வந்தனர்.
இறுதியில், உத்தரப் பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த ஷேக் சாதிக் கானைச் சிறப்புப் படையினர் துல்லியமாகக் கண்டறிந்து அதிரடியாகக் கைது செய்தனர். தடயங்களை மறைத்துத் தப்பிய குற்றவாளியைத் தொழில்நுட்ப ரீதியாகச் மடக்கிப் பிடித்த காவல்துறையினரின் இந்தச் சாதனை பெரும் பரபரப்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.