பாகிஸ்தான், சௌதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கி வரும் சக்திவாய்ந்த பிராந்திய ராணுவ கூட்டணியில் ஈரானும் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்தக் கூட்டணியில் இணைவதற்கு ஈரான் அரசு ஒரு முக்கிய நிபந்தனையை முன்வைத்துள்ளது. இதுபோன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தங்களில் ஈரானும் எகிப்தும் தவிர்க்க முடியாத முக்கிய சக்திகளாகும். எனவே, தங்களை வெறும் சாதாரண உறுப்பினர்களாகச் சேர்க்காமல், ‘இணை நிறுவன உறுப்பினர்களாக’ (Co-founding members) சேர்க்க வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது. அதாவது, கூட்டணியின் கொள்கைகள், சட்டதிட்டங்கள் மற்றும் ஒப்பந்த ஆவணங்களை உருவாக்கும்போதே தங்களது கருத்துகளுக்கும் யோசனைகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதே ஈரானின் முதன்மை நிபந்தனையாகும். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்களுக்கு மத்தியில், ஈரானின் இந்த முடிவு சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.