நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அந்நாட்டின் ராசுவா மாவட்டத்தில் உள்ள போட்டேகோஷி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 162 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், வெள்ளத்தின் சீற்றத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், பல கிராமங்கள் வெளி உலகத்துடனான தொடர்பை இழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காணாமல் போனவர்களைத் தொடர்பு கொள்ள முடியாத நிலை நீடிப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் பல மடங்கு உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பாக மீட்கும் வகையில் ராணுவம் மற்றும் மீட்புப் படையைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட வீரர்கள் தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் சீற்றமடைந்த வெள்ளப் பகுதிகளில் உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.