ஜெர்மனியின் மிகவும் பரபரப்பான ஃபிராங்க்ஃபர்ட் சர்வதேச விமான நிலையத்தில், அரிய வகை மலேரியா நோய் பரவியதில் இரண்டு ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டிலிருந்து வந்த விமானம் ஒன்றில் நுழைந்த மலேரியா காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் மூலம் இந்தத் தொற்று பரவியதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கொடிய நோய்த்தொற்றினால் மொத்தம் ஆறு விமான நிலைய ஊழியர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை பலனின்றி இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பொதுவாக மலேரியா பாதிப்பு இல்லாத ஐரோப்பிய நாடுகளில், இதுபோன்று சர்வதேச விமானங்கள் மூலம் கொசுக்கள் பரவி நோய் தாக்குவது ‘விமான நிலைய மலேரியா’ (Airport Malaria) என்று அழைக்கப்படுகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் தீவிர தூய்மைப் பணிகளும், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், வெளிநாடுகளிலிருந்து வரும் சர்வதேச விமானங்களில் கொசுமருந்து தெளிக்கும் நடைமுறைகளை மேலும் தீவிரப்படுத்த ஜெர்மனி அரசு உத்தரவிட்டுள்ளது.